why untouchability is followed

முதல் பகுதியில் ஒருவர் தன்னை இந்துவாக கூறிக்கொள்வதில் உள்ள பிரச்சனை, வேதங்களின் உள்ளடக்கம், அவற்றின் நிலை பிற்காலத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டது, இந்துக் கடவுள்கள் ஒருவருடன் ஒருவர் சண்டைபோட்டுக் கொள்வதற்கான காரணம், வேதங்கள் அறநெறி, ஆன்மீகப் பண்பு கொண்டவையா போன்ற கேள்விகளை ஆராயும் எழுத்துகள் இடம் பெற்றுள்ளன. இரண்டாவது பகுதியில், பௌத்த சமயத்தின் வீழ்ச்சி பற்றியும், இந்து சமய இலக்கியங்களான பகவத் கீதை, வேதாந்த சூத்திரங்கள், மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை குறித்தும் அம்பேத்கர் எழுதியவை இடம்பெற்றுள்ளன. மூன்றாவது பகுதியில் தீண்டாமை குறித்தும் அம்பேத்கர் ஆராய்ந்து எழுதிய எழுத்துகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய அரசியல்சாசன நிர்ணய சபையின் தலைவராக இருந்த அம்பேத்கர் சட்டமேதையாக மட்டும் அறியப்படும் நிலையில், அவருடைய பன்முகத் தன்மையைச் சுட்டிக்காட்டும் வகையிலும் ஜாதி தொடர்பான தாக்குதல்களும் வேறுபாடுகளும் அதிகரித்திருக்கும் தற்போதைய சூழலில் அவருடைய எழுத்துகளின் தேவையை உணர்த்தும் வகையிலும் இந்தத் தொகுப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு முறை அம்பேத்கரின் தந்தை ராம்ஜி, கோரிகோன் என்னும் இடத்தில் காசாளராக பணிபுரிந்து வந்தார். அந்த ஊருக்குச் சென்று தங்கள் தந்தையைப் பார்த்து வரவேண்டிய அவசியம் அம்பேத்கருக்கும் அவருடைய அண்ணனுக்கும் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தங்கள் வருகையைக் குறித்து தங்கள் தந்தைக்கு எழுதினார்கள். ரயில் நிலையத்திற்கு வந்து தங்களை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார்கள். பிறகு, தங்கள் திட்டப்படி ரயில் வண்டியில் ஏறிச் சென்று தாங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்த நிலையத்தில் இறங்கினார்கள். தங்கள் தந்தை வருவார் என்று வெகு நேரம் காத்திருந்தார்கள். குறித்த நேரத்தில் கடிதம் கிடைக்காததால் ராம்ஜி, தன் மகன்களை அழைக்க ரயில் நிலையத்திற்கு வரவில்லை.

நெடுநேரம் காத்திருந்தும் தந்தை வராததால் அம்பேத்கரும், அவருடைய அண்ணனும்  மனம் சோர்ந்தனர். அந்த ரயில் நிலையத்தில் இருந்த அதிகாரி நல்ல மனிதர். நீண்ட நேரமாக நிலையத்தில் காத்திருக்கும் அம்பேத்கரையும், அவர் அண்ணனையும் நெருங்கி விசாரித்தார். விஷயம் அறிந்து வருத்தப்பட்டார். தாம் உதவி செய்வதாகக் கூறினார். நிலையத்தின் அருகில் இருந்த ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொடுத்து கோரிகோனுக்குச் செல்லும்படிக் கூறினார்.

அண்ணனும் தம்பியும் அதிகாரிக்கு நன்றி கூறினார்கள். வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டிக்காரன் வண்டியை ஓட்டிச் சென்றான். வண்டி சென்றுகொண்டிருக்கும்போதே, வண்டிக்காரன் மெல்லப் பேச்சைத் தொடங்கினான். அம்பேத்கரையும், அவரது அண்ணனையும் பற்றி விசாரித்தான். களங்கம் இல்லாத சிறுவர்கள் இருவரும் தாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைக்காமல் கூறிவிட்டனர்.

அவ்வளவுதான் வண்டிக்காரனுக்குக் கடும் கோபம் வந்தது. தாழ்த்தப்பட்டவர்களைத் தன் வண்டியில் ஏற்றியதால் தன் வண்டி தீட்டுப்பட்டுவிட்டதாக எண்ணினான். வண்டியைவிட்டுக் குதித்தான்.மாட்டை அவிழ்த்துத் தூர நிறுத்தினான். குப்பைக் கூடையைக் கவிழ்ப்பதுபோல வண்டியைத் தலைகீழாகக் கவிழ்த்தான். பாவம்! அம்பேத்கரும் அவருடைய அண்ணனும் சாலை ஓரத்தில் சென்று விழுந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் அழுக்காயின. வாய், கண், காது, மூக்கு, உடல் முழுவதும் மண்ணாயின. அவர்கள் ஏதும் அறியாமல் திகைத்து நின்றனர்.

வண்டிக்காரனோ வாயில் வந்தபடி ஏசிக்கொண்டிருந்தான். அம்பேத்கரின் அண்ணன் சிறிது நேரம் யோசித்தார். வண்டிக்காரனோடு தகராறு செய்வதில் பயன் இல்லை என்று உணர்ந்தார். வண்டிக்காரனை மெல்ல நயந்து காரியம் சாதிக்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் வண்டிக்காரனைப் பார்த்து, "வண்டிக்காரரே, கோபப்படாதீர்கள். வண்டியில் ஏறக்கூடாது என்பது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. அதனால்தான் ஏறிவிட்டோம். மன்னித்துக்கொள்ளுங்கள். உங்கள் வண்டியும் தீட்டுப்பட்டுவிட்டது. நாங்களும் ஊருக்குச் சென்றாக வேண்டும். ஊரோ புதிது. அதனால் நீங்கள்தான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். வேறு வழியில்லை. பேசிய கூலியைவிட இரண்டு மடங்கு அதிகம் தருகிறோம். தயவு செய்து வண்டியில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று பணிவோடு கேட்டுக்கொண்டார்.

பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் அல்லவா? இரண்டு மடங்கு அதிகப் பணம் என்றதும் வண்டிக்காரனின் கோபம் போன இடம் தெரியவில்லை. ஆயினும், தாழ்த்தப்பட்ட சாதிச் சிறுவர்களுக்கு வண்டி ஓட்டத் தயாராக இல்லை. வண்டியை அம்பேத்கரின் அண்ணனே ஓட்ட வேண்டும் என்று முடிவானது. அம்பேத்கர் வண்டியில் அமர்ந்துகொண்டார். அண்ணன் வண்டியை ஒட்டினார். வண்டிக்காரனோ, வண்டியைத் தொடர்ந்து சென்றான்.

செல்லும் வழியில் அம்பேத்கருக்கும் அவரது அண்ணனுக்கும் தண்ணீர்த் தாகம் எடுத்தது. பாதையில் இருந்த வீடுகளை அணுகித் தண்ணீர் கேட்டார்கள். ஒருவரும் அவர்களுக்குத் தண்ணீர் கொடுக்க முன்வரவில்லை. குட்டையில் கிடக்கும் நீரையும், குழம்பிய சேற்று நீரையுமே குடிக்கச் சொன்னார்கள். தண்ணீர் கேட்கச் சென்றவர்களை வெறுப்போடு நோக்கி "விலகிப் போங்கள்" என்று கூறினார்கள். யாருடைய நெஞ்சிலும் அன்பு பிறக்கவில்லை. சிறுவர்கள் தாகத்தால் வெயிலில் பறித்துப்போடப்பட்ட கீரைகள் போலத் துவண்டார்கள். மாலை முதல் இரவு வரை அந்த நிலை நீடித்தது. தந்தையைக் கண்ட பிறகே அவர்களுக்குத் தண்ணீர் கிடைத்தது. உயர்சாதிக்காரர்கள் என்போர் இழைத்த கொடுமைகளை எண்ணி அந்த இளம் உள்ளங்கள் நொந்தன. சிறுவரான அம்பேத்கரின் மனமோ மிகவும் புண்பட்டது.

இதைப்போல அம்பேத்கருக்கு மற்றொரு முறையும் ஓர் அனுபவம் ஏற்பட்டது. அப்போதும் அவருக்குத் தண்ணீர் தாகம். எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. எல்லோரையும் கேட்டுப் பார்த்தார். யாரும் தண்ணீர் தருவதற்கு முன்வரவில்லை. நாக்கு வறண்டது. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அருகில் இருந்த பொதுத் தண்ணீர் துறையில் இறங்கித் தண்ணீர் குடித்துவிட்டார். அதை ஒரு உயர்சாதிக்காரர் பார்த்துவிட்டார். பிறகு கேட்கவேண்டுமா? பிடித்து வரப்பட்ட அம்பேத்கர் ஈவு இரக்கம் இல்லாமல் தாக்கப்பட்டார்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author