சார் சார்.....
மெதுவாக கண்விழித்து பார்த்தேன்.
சார் நீங்க சொன்ன ஏரியா வந்துடுச்சு இதுக்குமேல நீங்கதான் வழி சொல்லனும்.
நான் வழி சொல்றதா?என்னோட வழிகள் எல்லாத்தையும் முள்ள போட்டு நிறைச்சு வச்சிருக்கான் ஒருத்தன்.உங்களுக்கு வழி சொல்லனுமா?
என்ன சார் சொல்றீங்க புரியல?
சாரிண்ணா.நேராப் போய்ட்டு முதல் ரைட் ரெண்டாவது லெப்ட் எடுத்து திரும்பவும் நேராப்போங்க அங்க ஒரு ஜன்க்ஷன் இருக்கும் அதுல லெப்ட் எடுத்து போனீங்கனா ஒரு வீடு முன்னால ரெண்டு தென்னை மரம் இருக்கும் அங்க நிறுத்துங்க.
சரிங்க சார்.
வண்டி மெல்ல நகர்ந்து என் மனதை போல.
அவன் பேர் ரிஷி.ரிஷி த ராக்(பாறை) ஆனால் இன்னைக்கு அவன் ஒரு சேற்றை போல எனக்கு தோன்றினான்.புரியலையா?எனக்கும் தான்.
நான் கௌதம்.நானும் ரிஷியும் மூணாவது படிக்கிறதுல இருந்து பிரெண்ட்ஸ்.அதுக்கு முன்னாடி இருந்து கூட இருக்கலாம்.......
எங்க ரெண்டு குடும்பத்துக்கும் நடுவுல
முன்ன பின்ன எந்த தொடர்பும் இல்லை எங்கள் நட்பை தவிர அது போதாதா........
ரெண்டு குடும்பமும் ஓரளவுக்கு வசதியான கும்பம்தான்.ஆனால் அதெல்லாம் நாங்க கண்டுக்கவே மாட்டோம்.ஜாதி மதம் ஏழை பணக்காரன் இதெல்லாம் பாத்து காதல் வராதுன்னு சொல்வாங்க பிரெண்ட்ஷிப் எதையுமே பாக்காது நட்பை தவிர.
எங்களால் எங்க குடும்பம் ஒன்னானது.
எங்க அப்பாவோட ஆயில் மில்லுக்கு ரிஷியோட அப்பாவும் அவனோட அப்பாவோட ஸ்டீல் கம்பெனிக்கு என்னோட அப்பாவும் உதவிக்கிட்டாங்க...... காலபோக்கில் ரெண்டு பேரும் பார்ட்னர்ஸ் கூட.
எங்க ரெண்டு குடும்பத்துக்கும் குட்டி இளவரசி என் தங்கச்சி நதியா.அவளுக்கு ஒன்னுனா எங்க உயிர்வரை வலிக்கும்.அவ்ளோ செல்லம் எல்லாருக்கும்.அதே சமயம் பயங்கர வாலும்கூட.....
இன்னைக்கு நதியா முகத்துல சிரிப்பு இல்லை.நிதானம் இல்லாமல் மயங்கிக் கிடக்கிறாள் எங்க எல்லார் நம்பிக்கையையும் உடைச்சு எங்க மனச ரணமாக்கிட்டான் அந்த பாவி ரிஷியால தான்.அவன் இப்படி பண்ணுவான் கொஞ்ச நாள் முன்னாடி யாராவது சொல்லியிருந்தா நான் சத்தியமா அவங்கள மனநலமருத்துவரை பாருங்கனு சொல்லியிருப்பேன்.
சின்ன வயசுல இருந்து எந்த ஒரு விஷயமும் என்கிட்ட கேட்டுதான் செய்வான்.நானும் தான்.போடுற ட்ரெஸ்ல ஆரம்பிச்சு ஸ்கூல் காலேஜ் எல்லாம்மே.....
சுருக்கமா சொல்லனும்னா அடுத்தடுத்த தெருவில் வசிக்கும் ஒரு கூட்டுக்குடும்பம் நாங்கள்.
மனுஷனுக்கு நேரம் காலம் எப்படி மாறும் யாரலையும் சொல்ல முடியாது.நேரங்காலத்துக்கு ஏற்ப மனிதனின் மனசும் அவனோட மனசுல இருக்கிற எண்ணங்களும் எப்படி மாறும் சொல்லமுடியாது.ஆனால் என் ரிஷி(நேற்றுவரை அப்படித்தான் நினைத்திருந்தேன்)இதுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நினைத்தேன்.அது முட்டாள்தனம்.
ரிஷிக்கு என்னைப்போல நெருங்கிய நண்பர் அவனது அப்பா தேவராஜ்.இன்னும் சொல்லப்போனால் நாங்கள் அடிக்கும் லூட்டியில் யார் வயசு பசங்க என்று சந்தேகம் வருமளவிற்கு எளிமையாக பழகும் மனிதர்.அதனாலேயே எனது அப்பா கிருஷ்ணன் எங்களிடம் சிறிது கண்டிப்புடன் இருப்பார்.
அன்னையர்களை பற்றி சொல்லத்தேவையில்லை.வஞ்சகமில்லா தன்னலமில்லா அன்பை தரும் உள்ளங்கள் அவர்கள்.
சிறுவயதில் இருந்து ரிஷி நன்றாக டென்னிஸ் விளையாடுவான்.எனக்கு கிரிக்கெட்தான்.
எனக்கு மாதவன் என்றால் அவனுக்கு விஜய்,சச்சின்-கங்குலி,இனிப்பு-காரம்,
டீ-காபி,என்ஜினியரிங்-ஆர்ட்ஸ் எல்லாமும் எதுகை மோனைதான் நட்பை தவிர.இனிமேல் அதுவும் இல்லை.
அவனைப் போலே நதியாவிற்கும் டென்னிஸ்தான் இஷ்டம்.அவளிற்கு எப்போதும் ரிஷியின் மீது தனிப்பிரியம்.ஏனெனில் நானும் அவளும் எலியும் பூனையும் போல இருக்க.ரிஷியின் ஓட்டு நதியாவிற்கே.
வீட்டுப்பாடம் செய்வதில் இருந்து டென்னிஸ் சொல்லித்தருவது வரை நதியாவின் வழிகாட்டி ரோல்மாடல் ரிஷி.வழிகாட்டியாக எண்ணியிருந்த ரிஷியே தவறியதே அவளை முதலில் பாதித்தது.எனக்கு தெரியும் நன்றாக தெரியும் நதியாவின் நிலை இப்போது எப்படியிருக்குமென......
நண்பனை நம்பி நான் மோசம் போனது போலதான் அவளுக்கும் இருக்கும்.
அந்த வீட்டின் முன் வண்டி நின்றது.ஆழமூச்செடுத்து ஒருமுறை கண்களை இறுக மூடித்திறந்தேன்.என் வரவை கண்டு என் அம்மா அப்பா என்று அனைவரும் வந்தனர்.யாரின் முகத்தையும் நான் பார்க்கவில்லை யார் சொல்வதும் என் காதில் விழவில்லை மனமானது சீற்றதில் தகித்துக்கொண்டிருந்தது.உள்ளே சென்றேன் அங்குதான் அவனிருந்தான்.என்னுடைய முன்னாள் நண்பன் இந்நாள் துரோகி.
அவனைக் கண்டதும் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.வில்லை விட்டு புறப்படும் அம்புபோல பாய்ந்து அவனை அடித்தேன்.என் ஆத்திரம் உள்ளமட்டும் அடித்தேன்.பல கைகள் என்னை தடுக்க முற்பட்டும் அடித்தேன்.அவன் அத்தனையும் வாங்கிக்கொண்டு எதிர்வினையேதும் காட்டவில்லை.எப்படி காட்டுவான் அவன்தான் துரோகி ஆகிற்றே.
அருகில் இருந்த அறையில் என்னை அழைத்து சென்று சமாதானம் செய்தனர்.இருப்பினும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.ரத்த நிறம் பூசிக்கொண்டனர் என் கண்கள்.பலதரப்பட்ட கருத்துகள் பேச்சுகள் ஏசுகள் புலம்பல்கள் எல்லாம் நடந்தேறியது.சிறிது நேரம் கழித்து அவனை அழைத்து சென்றனர்.
எதுக்குடா இப்படி இருக்க ஏதாவது செய்.நமக்கு எதுக்கு இந்த நிலைமை?என்று என் அம்மா என்னிடம் முறையிட நான் ரௌத்திரம் பூசிய கற்சிலைபோல அமர்ந்திருந்தேன்.
அவனை அழைத்து சென்றனர்.அவனை காண சக்தியற்று நகராமல் அமர்ந்திருந்தேன்.
ஆயிற்று இன்றோடு மூன்று நாட்கள்.....
என் அறையில் எனக்கு வனவாசம்.ஒரு பெரிய அடியில் வீழ்ந்து செயலிழந்து இருக்கும் என் இதயம்.
என் அம்மா வந்தார்.கௌதம் ஏன்டா கண்ணா இப்படி பண்ணுற.இப்படி சாப்பிடாம தூங்காம அடைந்து கிடக்கிற.......ரிஷி செய்தது உனக்கு மட்டுமா வருத்தம் எங்களுக்கு இல்லையா?நதியா சின்ன பொண்ணுடா?இப்போ நீதான் அவளுக்கு தைரியம் சொல்லனும்.
உனக்கு நண்பனோட இழப்புனா எங்களுக்கு எங்க ஒரு புள்ளையோட இழப்புடா.எங்களுக்கு நீயாவது வேணும்டா.ப்ளீஸ் கௌதம்........
நித்தியா கால் பண்ணிருந்தா.மூணு நாளா உன்கிட்ட பேச முயற்சி செய்றா?தயவு செய்து அவள்கிட்ட பேசு.அவளும் ரொம்ப பயந்துதான் இருக்கா(நித்தி என்னோட வருங்கால மனைவியாக போகிறவள்).
கண்ணீரோடு அறையை விட்டு வெளியேறினார் என் அன்னை.
ரிஷி அப்படி என்ன செய்துட்டான் அவன் என்ன செய்து இருந்தாலும் அவன் என்னோட நண்பன் மன்னிக்கலாம்தான்.ஆனால் அவன் செய்தது தவறு இல்லை மித்ரதுரோகம்.
ஆமா ரொம்ப ஈஸியா இந்த வாழ்க்கை ஓட்டத்தில் இருந்து விலகிட்டான் தற்கொலை பண்ணிக்கிட்டான்.
ஒரு வருஷத்துக்கு முன்னாடி ரிஷி அப்பாவோட தொழிலில் ஒரு சின்ன சறுக்கல் அதிலிருந்து வெளிவர பணத்தை கொடுத்து ஏமாந்துட்டாரு.அதுல பெரிய அளவு நஷ்டம்.கிட்டத்தட்ட தொழிலை மூடுற அளவு.அந்த டென்ஷன்ல கார் ஓட்டிட்டு போனபோது விபத்துல சிக்கி கோமா நிலைக்கு போய்ட்டார்.
அப்பாவோட நிலைமை தொழில் நஷ்டம் அம்மாவோட அழுகை அப்பாவோட மருத்துவ செலவு என்று எல்லாம் ரிஷிய ரொம்ப பாதித்தது.எங்களால் முடிந்த அளவு உதவினாலும் நஷ்டம் கொஞ்சம் பெரிய அளவுனால சிரமமாக இருந்தது.
வரிசையாய் அடுக்கியிருந்த பிரச்சனைகளை விட அவனுக்கு அவனோட அப்பாவோட நிலைமை ரொம்ப வருத்தமாகவும் கலக்கமாகவும் இருந்தது.அவனோட இந்த கவலை எனக்கு நல்லாவே தெரிந்தது ஏன்னா எனக்கும் அவர் பிரெண்ட்.
நாட்கள் நகர நகர கடன்தொல்லை அவங்க நிறுவனத்தை நம்பியிருந்த தொழிலார்கள் வேலை போகபோகும் அபாயத்துல தங்களோட சம்பள பாக்கி கேட்டு போராட எல்லாம் சமாளிக்க திணறினோம்.
கம்பெனியை வித்துடலாம் சொன்னதுக்கு ரிஷி சம்மதிக்கல அப்பா கஷ்டப்பட்டு உருவாக்கியது அதோட யானை இளைத்தால் எறும்புகூட கேலிபண்ணும் அதுமாறி போட்டி கம்பெனிகள் கம்பெனியை விற்றாலும் நஷ்ட தொகையாதான் இருக்கிற மாறி அவதூறு பரப்பினார்கள்.
ஒரு வருஷமா நிறையா முயற்சி செய்து போராடினோம்.ரிஷிக்கு உதவியா இருக்கனும்னு எங்க கம்பெனில பாதி ஷேர் விற்று ஓரளவுக்கு சமாளிச்சோம். ரிஷி அப்பாவோட உடல்நிலை ஏற்ற இறக்கமாக இருக்க அது அவனுக்கு மிகப்பெரிய அடியா இருந்தது.எந்த அளவு எங்க குடும்பங்கள் சந்தோசமாக இருந்ததோ அதே அளவு கண்ணீர்ல மிதந்தது.
அவன் மனசுக்குள்ள இருந்த அழுத்தம் அவன் எங்களுக்கு ரொம்ப தொல்லை தருவதாகவும் நாங்களும் சேர்ந்து கஷ்டப்படுவதாகவும் பைத்தியக்காரன் என்கிட்ட இருந்து மறைத்தான்.அப்படினா அவன் என்னை நம்பவே இல்லையா?கடைசிவரை அவன்கூட போராடா நானிருப்பேனென்று.....இல்லை அவனை பொறுத்தவரை அவ்வளவுதான எங்கள் நட்பு??
பாலக்காட்டில் வழக்கில் நெடுகாலமாக சிக்கியிருந்த என் அப்பா வழி சொத்தின் வழக்கு எங்களுக்கு சாதகமாக அமைந்தது.அதை விற்றுவிட்டு மொத்த கடனையும் அடைக்கலாமென்று அவனுக்கு தெரியாமல் அப்பா என்னை அங்கு சென்று அதை விற்பதற்காக ஏற்பாடு செய்ய அனுப்பியிருந்தார்(அவனுக்கு தெரிந்தால் அனுமதிக்க மாட்டான் என்பதால்).
ஒருவாரம் வேலை விஷயமாக வெளியூர் சென்று வருகிறேன் என்று மட்டும் அவனிடம் கூறினேன்.பதிலுக்கு அவனின் வெறுமையான பதில் போடா என்கூட இருக்கவங்க எல்லாருக்கும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டம்.நீயாவது சந்தோஷமா இருடா.
டேய் பைத்தியம்மாறி பேசி என்கிட்ட நல்லா சாத்து வாங்கபோற நீ.மரியாதையா வீட்டுக்கு போ.நான் போய்ட்டு வரேன்.அன்று ரயில்நிலையத்தில் அவனை கடைசியாக என் நண்பனாக பார்த்தது.
நான் அன்னைக்கே ஏமாந்துட்டேன்.அவன் என்னை எங்கபோற?என்ன வேலையா போற?இப்படி எதுமே கேட்காம என்னை வழியனுப்பி வைத்தான்.அப்பவே அவன் இந்தமுடிவை எடுத்திருக்கனும்.
அந்த இடம் விற்றால் எங்கள் கடன் பிரச்சனைகள் எல்லாம் சரி ஆகிடும் நினைப்பில் நானும் அதை கவனிக்காமல் இருந்தது என்னோட தப்புதான்.நான் இதப்பத்தி முன்னாடியே சொல்லிருந்தா அவன் முடிவு மாறிருக்கலாம்.
ஆனால் நான் சொல்லைனா என்ன அவனுக்கு என்மேல் நம்பிக்கை இருந்திருக்கனும் எப்படியும் கௌதம் இதை சமாளிக்க வழிகாட்டுவான்......அட்லீஸ்ட் கௌதம் எந்த சூழ்நிலையிலும் எனக்கு துணையா இருப்பான்னு அவனுக்கு தெரிஞ்சிருக்கனும்.இந்த அடிப்படை நம்பிக்கை கூட இல்லைனா எப்படி????
இன்னைக்கு அவன் என் நட்பை நொறுக்கி ஒரு அப்பா அம்மாவோட அளவில்லாத பாசத்தை மறந்து நதியாமாறி ஒரு தங்கச்சியோட நம்பிக்கையை உடைத்து அவன் சாதித்தது என்ன????
நாளைக்கே ரிஷியோட அப்பாக்கு நினைவு திரும்பி என் புள்ள எங்கேனு கேட்டா நான் என்ன சொல்றது.......அவங்க ரெண்டு பேரோட இழப்பு எனக்கு ரெண்டு கைகள் இழந்தமாறி சோர்வடைய செய்தது.
அவன் செய்ததுக்கு நான் திருப்பி தர வேண்டாமா????
கௌதம் எங்கடா கிளம்பிட்ட?என் பதில் மௌனம் மட்டுமே.
மஞ்சு அவனை போகவிடும்மா....கொஞ்சம் வெளியே போய் வந்தால்தான் அவனுக்கும் ஒரு ஆசுவாசமா இருக்கும்.
என்னதான் கடுமையாக காட்டிக்கொண்டாலும் பிள்ளைகளின் வேதனைகளில் தூணாக நிற்பவர்கள் தந்தைகள்.கௌதம் நீ இப்படி இருந்தால் ஏதும் மாறாது.நீ ஏதோ ஒரு விதத்தில் இதுல இருந்து வெளிவரனும்.ப்ளீஸ் எங்க எல்லாருக்கும் இப்போ நீ தான் துணையாக இருப்பனு நம்புறோம்.
ஒரு நன்றி கலந்த கண்ணீர் என் கண்களில்(நீங்களாவது என்னை நம்புறீங்களா ப்பா)போய்ட்டு வரேன்ப்பா......
பாத்து போய்ட்டுவா கௌதம்.
நீண்ட நேர மனப்போராட்டம் இது இறுதியாக இருக்கவேண்டுமென்று நானே விடாமல் மனதிற்குள் போராடுகின்றேன்.அனைத்தும் பார்த்துக்கொண்டு அமைதியாக உறங்குகிறான் ரிஷி அவன் சமாதியில்.......
ரிஷி நீ இதுவரைக்கும் எனக்கு நிறைய நல்ல நினைவுகளை கொடுத்திருக்கிறாய் ஆனால் இப்போ அதெல்லாம் என் மனசுலவடுவா மாறிபோச்சு.நீ என்னை நம்பாமல் தற்கொலை பண்ணிக்கிட்ட.நான் துரோகி இல்லை ரிஷி என்னோட நட்பு சுத்தமானது.அப்பறோம் கடைசியா i hate you rishi..... hate you to the core......
என் கதறல்கள் நிச்சயம் அவனை சேர்ந்திருக்கும் என்றெண்ணி அவ்விடம் நீங்கினேன்.
மாலை ஆறுமணி,எங்கள் வீடு....
நான் வந்ததும் அம்மா அப்பா இருவரும் என்னை நோக்கி வந்தனர்
ஏண்டா இவ்ளோ நேரம் எங்க போயிருந்த????
ஆம்புலன்ஸில் இருந்து தேவராஜ் அங்கிளை இரண்டு நபர்கள் இறக்கி எங்கள் வீட்டின் ஒரு அறையில் அவருக்கான மருத்துவ வசதிகளோடு சீரமைத்தனர்.ரிஷியம்மாவை எனது பெற்றோர்கள் அன்போடு அரவணைத்துக் கொண்டனர்.
இன்று முதல் ரிஷிக்கு பதிலா நான்தான் அவங்க புள்ள.ரிஷிவேனா தப்பான முடிவு எடுத்திருக்கலாம்.நான் நிச்சயமா அப்படி செய்யமாட்டேன்.அதனால் நீங்க என்னைபற்றி கவலைபடாம இருக்கலாம்.ரிஷியோட அப்பா அம்மா இனிமேல் நம்மகூட இருப்பாங்க.ப்ளீஸ் ப்பா.....
எனது வலப்புறமும் இடப்புறமும் அப்பாவும் அம்மாவும் என்னை அணைத்துக்கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.