ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 19.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதேபோல், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 179 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. தொடர்ந்து மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதுகின்றன.
கமல் விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விக்ரம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
நெல்லை கல்குவாரி விபத்து!
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்தில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 2வது நாளாக ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நெல்லை கல் குவாரி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் முருகன், விஜய் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று வழங்கினர்.
கல் குவாரி விபத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். 5 வருடங்களுக்கு குவாரி செயல்பட 2018ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது – நெல்லையில், சபாநாயகர் அப்பாவு பேட்டி!
நெல்லை கல்குவாரி விபத்து. 4 பேர் மீது வழக்கு!
நெல்லை, பொன்னாக்குடி அருகே கல்குவாரி விபத்து தொடர்பாக கல்குவாரி உரிமையாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்ட 4 பேர் மீது, 3 பிரிவுகளில் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நுால் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!
ஈரோடு, கரூர் உட்பட தமிழகம் முழுவதும், நுால் விலை உயர்வை கண்டித்தும், நூல் விலையை குறைக்க கோரியும் இன்றும், நாளையும் ஜவுளி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் கரூரில் மட்டும் ₨100 கோடி அளவுக்கு ஜவுளி உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களிலும் நாளை (18ந்தேதி) ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரியில் இன்றும், நாளையும் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் பஜார், பந்தலூரில் தலா 10 செ.மீ மழையும், கிருஷ்ணகிரியில் 8 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மேலும் மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பூலாம்பாடி காலனி கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக் கடந்த 7-ந்தேதி காலை தனது 5 வயது பெண் குழந்தை லட்சிதாவை வேப்பூரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு குழந்தைகள் நல மருத்துவர் என்றழைக்கப்படும் சத்தியசீலன் சிகிச்சை அளித்ததாகவும், சிகிச்சைக்குப்பின் அந்தப் பெண் குழந்தை லட்சிதா உயிரிழந்துவிட்டதாகவும், செய்திகள் வந்துள்ளன.
நல்லூர் வட்டார அரசு தலைமை மருத்துவர் தமிழரசன் தலைமையில் ஒரு குழு, குழந்தை லட்சிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சத்தியசீலனிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது, சத்தியசீலன் ஒரு போலி மருத்துவர் என்பது தெரிய வருகிறது.
காய்ச்சல், சளி, இருமல் போன்ற சாதாரண நோய் வந்தால் அருகில் உள்ள தனியார் மருத்துவர்களிடம் சென்று, பணம் செலவு செய்து மருத்துவ சிகிச்சை பெற முடியாத ஏழை, எளிய, நடுத்தர மக்கள், அவர்களின் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், முதற்கட்டமாக 2000 அம்மா மினி கிளினிக்குகளை தமிழகமெங்கும் அம்மாவின் அரசு தொடங்கியது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் இந்த அரசு, அம்மா மினி கிளினிக் திட்டத்திற்கு மூடுவிழா நடத்தியது.
இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீண்டும் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பூலாம்பாடி காலனியில் வசிக்கும் கார்த்திக்கும் தனது 5 வயது குழந்தை லட்சிதாவை, கட்டணம் குறைவு என்ற காரணத்தினால் போலி மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்று தனது குழந்தையை இழந்துள்ளார்.
இதுபோல் இன்னும் எத்தனை பேர் சிகிச்சைக்கு பணம் இல்லாத சூழ்நிலையில், குறைவான கட்டணத்தில் இது போன்ற போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று உடல் நலத்தை மேலும் கெடுத்துக் கொள்கின்றனரோ, உயிரையும் இழக்கும் சூழ்நிலைக்கு உள்ளாகின்றனரோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது.
நகர்புறங்களில் நிறைய மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், கிராமப்புறங்களில் தான் ஏழை, எளிய மக்கள் சாதாரண காய்ச்சல், சளி போன்ற உபாதைகளுக்குக்கூட அருகில் உள்ள நகர்புறங்களுக்குச் செல்ல வேண்டும்.
எனவே, அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட வேண்டும். உயிரிழந்த பெண் குழந்தை லட்சிதாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.
You must be logged in to post a comment.