what

தமிழகத்தில் பெருமளவில் இருந்த தூக்கணாங்குருவிகளின் எண்ணிக்கை, நீர்நிலைகளை பாதுகாக்காததால், மிக மிக வேகமாக குறைந்து  கொண்டே வருகிறது. இருந்தாலும், திருவள்ளூர் அருகே பனை மரங்களில் பருவமழையை முன்னிட்டு, தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி வருகிறது. ‘‘தூக்கணாங்குருவிக்கூடு தூங்கக் கண்டார் மரத்திலே’’ என்ற பாடல் காதுக்கு இனிமையாக இருப்பது போல் கூடுகளும் கண்ணுக்கு விருந்தாக...  இருக்கும். இன்றைய தலைமுறைக் குழந்தைகளில் எத்தனை பேர் தூக்கணாங் குருவியையும், அதன் கூட்டையும் பார்த்திருப்பார்கள் என்பது  கேள்விக்குரியதே. ஒரு அற்புதமான கட்டிடக்கலைஞன் பறவையாய் பிறந்து விட்டதே என்று வியக்கும் வண்ணம் ஒரு பறவை கூடுகட்டி வாழ்ந்து  வருகிறது. மரங்கள் அழிந்துவரும் நிலையில், இனி நம் சந்ததியினர் தூக்கணாங் குருவிகளையும், அது கூடுகள் கட்டும் விதத்தையும் நேரில் பார்க்க முடியாது.  நகரங்களில் வசிக்கும் நம் தலைமுறையினரே பார்க்க இயலாது. இவை மழைக்காலத்தின் தொடக்கத்தில் கூடமைக்கத் தொடங்குகின்றன. ஆண்  மட்டுமே கூடு கட்டும் பணியில் ஈடுபடும்.

 

கூட்டினுள் இருக்கும் முட்டைகள் வேகமாக வீசும் காற்றில் கீழே விழாமல் இருக்கும் வண்ணம், காற்றடிக்கும் திசைக்கேற்ப கூட்டின் நுழைவுவாயிலை  தூக்கணாங்குருவி அமைக்கும். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட தூக்கணாங்குருவியின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே  உருண்டையாகவும், கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்நோக்கி இருக்கும். உள்ளே இருக்கும் அந்த  வடிவமைப்பையும், மிருதுவையும் பார்க்கும்போது நாம் கூட்டிற்குள் போய் தூங்கி கொள்ளலாமா என ஆசை வருவது தவிர்க்கமுடியாது.கூடு கட்டும் பொறுப்பு ஆணுக்கு...!: கூட்டின் உட்புறத்திற்கு மிருதுவான நெல் வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. வெளிப்புறத்திற்கு மற்ற உறுதியான  புல், நீளமான வைக்கோல் இவற்றுடன் உறுதிக்காக ஈரமான களிமண், உலராத மாட்டு சாணி போன்றவற்றை பசை போல் பயன்படுத்தி கூட்டை  உருவாக்குகின்றன.

 

இவைகளின் சிறப்பான வடிவு கொண்ட அலகால், வைக்கோலையும், புல்லையும் முடிச்சு போட்டு கட்டப்படும் இவற்றின் கூடுகள் மிக உறுதியானவை.  இதனால் வைக்கோல் கூடு பிரிவதில்லை. காற்றினால் கீழே விழுவதில்லை. முக்கியமாக உறுதியான, பாதுகாப்பான கூட்டை உருவாக்கும் பொறுப்பு  ஆண் பறவைகளை சார்ந்தது.

செழிப்பான நீர் பகுதி, உயரமான பனை மரம், தென்னை மரம் போன்ற இடங்களில் இவை கூட்டை கட்டுகின்றன. கூட்டம் கூட்டமாக வாழும்  இவைகளின் கூட்டத்தில் 20 முதல் 30 வரை கூடுகள் இருக்கும். ஒரு கூடு கட்ட 500 தடவை சேகரிப்பிற்காக பறக்கின்றன. மொத்தம் 4000 பதர்களை  கொண்டு இவை கூடு கட்டுகின்றன. மொத்தம் கூடு கட்ட 18 நாட்கள் எடுத்து கொள்கின்றன. அவற்றில் குடுவை போல இருக்கும் பகுதிக்கு 8 நாட்கள்  வரை எடுத்துக் கொள்கின்றன.என்னை பார்... என் கூட்டை பார்...!: கூடு ஓரளவிற்கு முடிந்த பின் ஆண் குருவி, வாசலில் இருந்து பறந்து செல்லும் பெண் குருவிக்களுக்கு, ‘‘என்னை  பார், என் கூட்டை பார்’’ என சமிக்ஞை கொடுக்கும். பின் பெண் குருவி உள்ளே வந்து பார்வை இடும். அதற்கு திருப்தி இருந்தால் இணைவிற்கு  ஓ.கே., சொல்லிவிடும்.பின் நீளமான வால் போன்ற பகுதியை கட்ட ஆரம்பித்து கூட்டை முடிக்கும். கூட்டின் உட்பகுதிகளில் பெண் குருவிகளின்  விரும்பத்திற்கு ஏற்றார்போல் கட்ட வேண்டியது ஆண் குருவிகளின் பொறுப்பு. சில நேரங்களில் உட்கட்ட அமைப்புகளில் திருப்தியுறாத பெண்  பறவைகள், தாங்களே தன் விருப்பத்திற்கு ஏற்றது போல கட்டிக்கொள்கின்றன.

 

ஆண் பறவைகள் நிறைய கூடுகளை கட்டி முடிக்காமலே வைத்திருக்கும். பெண் துணை உறுதியானதும் பின் கூடு முழுமையடையும். வீடு கட்டியாகி  விட்டது. வீட்டுக்கு விளக்கேற்ற வேண்டுமே. பறவைகள் மண்ணெண்ணெய்க்கும், மின்சாரத்துக்கும் எங்கு போகும். இயற்கை அதற்கும் வழி  சொல்லித்தந்துள்ளது. ஒரு மின்மினிப்பூச்சியை பிடித்து வந்து கூட்டில் வைத்துள்ள ஈரகளிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் தூக்கணாங்குருவி ஒளியேற்றிக்  கொள்கிறது. பின்னர், பெண் பறவை 3 முதல் 4 முட்டைகளை இடும். பெண்பறவை 15 நாள் வரை அடைகாக்கிறது. குஞ்சு ஓரளவிற்கு வளர்ந்து பறந்து  சென்றுவிட்டவுடன், ஆண் குருவி அடுத்த பெண் குருவிக்கு அடுத்த கூட்டை கட்ட ஆரம்பிக்கிறது. பறவைக்குஞ்சு அருகில் உள்ள பகுதிகளுக்கு இடம்  பெயர்கிறது.

 

வண்ண நிறங்களில் கவரும் தூக்கணாங்குருவி

சிட்டுக்குருவி இனத்தை சேர்ந்தது தூக்கணாங்குருவி. இக்குருவியின் உச்சந்தலை, மார்பு ஆகியவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் குருவிகள்  பொதுவாக மரவண்ண நிறத்தில் இருக்கும். முட்டையிடும் பருவத்தில் ஆண், பெண் குருவிகள் இரண்டும் அடர்த்தியான பிரகாசமான மஞ்சள், கருப்பு நிறங்களைப் பெற்றிருக்கும். இனப்பெருக்கம்  இல்லாத காலங்களில் இவை கூடு கட்டுவதில்லை. அக்காலங்களில் இவை மரப்பொந்துகள் போன்ற அடைவிடங்களில் கூடி இரவைக் கழிக்கும்.

 

பொதுவாக இப்பறவைகள் முட்கள் இருக்கக்கூடிய ஈச்சமரம், கருவேலமரம், இலந்தை மரம் போன்ற மரங்களில் கூடுகளைக் கட்டும். நீர்வளம் நிறைந்த  பகுதிகளை தேடி இவை கூடுகளைக் கட்டும். முட்டைகளையும் குஞ்சுகளையும் உணவாக்கிக் கொள்ள வரும் பாம்பு, காகம் ஆகியவைகளிடம் இருந்து  தப்பிக்கவே இவ்வாறு கூடுகளைக் கட்டுகின்றன.

 

தூக்கணாங்குருவிகளின் மறைவு யாரால்...?

விவசாயப்பரப்பு குறைந்து வருவதும், பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிந்து வருவதும், இயற்கையை மனிதன் பகைத்துக் கொண்டதால் உருவாகும்  வறட்சியும், பஞ்சமும் இவற்றை மிகவும் பாதித்துள்ளன. அழிந்துவரும் இனங்களின் பட்டியலில் தூக்கணாங்குருவிகள் இடம் பெறும் நிலை உள்ளது.  1950, 60களில் நீர்நிலைகள் அருகில் இருந்த மரங்களில் இவற்றின் கூடுகள் தொங்குவது மிகவும் சாதாரணமான விஷயமாக இருந்தது. இன்று  அவற்றின் கூடுகளை காண மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க ஒரு இயக்கம் தோன்றியுள்ளதுபோல், இவற்றை  பாதுகாக்கவும் ஒரு இயக்கம் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

வறண்டு போன ஆறுகள், காய்ந்து போன ஏரிகள், கால்வாய்கள்  நிரந்தரமாகிவிட்ட இன்றைய சூழலில் இவை மாயமாகி வருகின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால், நாம் இயற்கையை பாதுகாக்க  வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும், பசுமையை உருவாக்க வேண்டும், காடுகளை பராமரிக்க வேண்டும். வரும்காலத்தில் நம் குழந்தைகள்  இன்னும் எவற்றையெல்லாம் இழக்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. அவர்கள் தூக்கணாங்குருவிகளை கம்ப்யூட்டர்களில் தான்  பார்க்கவேண்டுமோ...?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author