இவ்வுலகில் பெருவாரியான மக்களின் விருப்ப உணவாக பிரியாணி உள்ளது. ஆனால், அது எப்படி உருவானது என்பது பற்றி வெகு சிலருக்கே தெரியும் இது ஓர் உண்மை மற்றும் கற்பனை கலந்த கதை ஆகும். முன்பொரு காலத்தில் முகலாய மன்னர் ஒருவர் தம் நாட்டு பிரஜைகளுக்கு (மக்களுக்கு) ஓர் அறிவிப்பை வெளியிட்டார் அந்த அறிவிப்பானது சமையல் போட்டிக்கானதே ஆகும். போட்டிக்கான நிபந்தனையும் விதிக்கப்பட்டது. அது என்னவென்றால், போட்டியாளர் தயாரிக்கும் உணவு வகையானது, இதுவரை மாமன்னர் சுவைத்திருக்காத புதிய வகை உணவாக இருக்க வேண்டும். போட்டிக்கான பரிசும் அறிவிக்கப்பட்டது. இது மன்னர் அறிவித்த போட்டி என்பதால், பரிசும் பெரியதாகவே இருந்தது. அதாவது, 5000 பொற்காசுகள், விலை உயர்ந்த வைரங்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் மற்றும் கண்ணைக் கவரும் பட்டாடைகள் போன்றவையாகும். போட்டியில் வழக்கம்போல் நாட்டு மக்கள் பலரும் கலந்துகொண்டு தங்கள் தங்களின் திறமையை வெளிக்காட்டினர். ஆனால், அவர்கள் சமைத்த உணவானது மன்னர் விரும்பியபடி அமையவில்லை. இந்நிலையில் மன்னரின் விருப்பமானது நிறைவேறாமல் அவர் கவலையில் இருந்தார். இந்த சூழலில், ஓர் வெளிநாட்டை சேர்ந்த பிரஜை ஒருவன் நாட்டிற்குள் பிரவேசித்தான். நாட்டு மக்கள் மூலமாக போட்டியை பற்றி அவன் அறிந்தான். அவன் ஓர் பரம ஏழை, பிழைப்பைத் தேடியே இந்த நாட்டிற்குள் தஞ்சமடைந்தான். அதனால், அவன் இந்தப் போட்டியின் மூலம் தனது ஏழ்மையை போக்கிக் கொள்ள நினைத்து, போட்டியில் பங்கேற்க விரும்பினான். ஆனால், அவனுக்கு சமையல் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும் வெளிநாட்டுப் பிரஜை என்பதால், போட்டியில் கலந்து கொள்ள மன்னரின் அனுமதி வேண்டி பெற்றான். மேலும், இவனுக்கு மன்னரால், போட்டிக்கான காலக் கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. அது என்னவென்றால், "மன்னர் வேட்டைக்குச் சென்று அரண்மனைக்கு திரும்புவதற்குள் உணவு தயாராக இருக்க வேண்டும்". நிபந்தனையை ஏற்று போட்டிக்கு தயார் ஆனான். அரண்மனை சமையல் கூடத்தில் உணவு பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. இவன் சமையல் பற்றி அறியாதவன். ஆகையால், உணவிற்கான ஒவ்வொரு வகையான பொருளையும் தனித்தனி கொதிகலன்களில் தயார் செய்து கொண்டிருந்தான். அதாவது, அரிசி, காய்கறிகள், மசால் மற்றும் அசைவ வகை உணவு பொருட்கள் என தனித்தனியாக தயாராகிக்கொண்டிருந்தன. இந்நிலையில், ஓர் அறிவிப்பு வந்தது அது என்னவென்றால், மாமன்னர் வருகிறார்! வருகிறார்! வருகிறார்!!. அதாவது, மன்னர் வேட்டையை முடித்து அரண்மனைக்கு வந்து விட்டார் என்பதேயாகும். இதனால், அவனுக்கான காலக்கெடுவும் முடிந்தது. ஆனால் தனித்தனி கொள்கலன்களில் கொதித்துக் கொண்டிருந்த எந்த ஒரு உணவும் தயாராகவில்லை. அதனால் அவன் பதற்றமடைய தொடங்கினான். உடனடியாக அவனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அது என்னவென்றால், தனித்தனியாக கொதிகலன்களில் தயாராகிக் கொண்டிருந்த, உணவுப்பருட்களை ஒரே பாத்திரத்தில் இட்டு நிரப்பினான். அவ்வாறு நிரப்பிய உணவுப்பொருட்களை ஒன்றோடு ஒன்று சேர்த்தான். மேலும், உணவு சூடாக, அந்தப் பாத்திரத்தை அதற்கான மூடியைக் கொண்டு மூடி, அதன்மீது சூடான விறகு கட்டைகளை கொண்டு நிரப்பினான். (இதனையே நாம் இன்று பிரியாணி தயார் செய்யும் போது 'தம்' என்று கூறுகிறோம்). அரண்மனையிலிருந்து அதிகமான பணியாட்கள் உணவை எடுத்துச் செல்ல வந்தனர். ஆனால், அவர்கள் நினைத்தது போல் எண்ணற்ற வகையான உணவு பொருட்கள் அங்கு இல்லை. ஒரே ஒரு பாத்திரத்தில் மட்டுமே உணவு இருந்தது. உடனே, அவர்கள் போட்டியாளனிடம் ஒரே ஒரு உணவு பாத்திரம் மட்டுமே உள்ளது. மீதம் உள்ள உணவு பொருட்கள் எங்கே? என்று கேட்டனர். இதற்கு, போட்டியாளன், ஒரு பாத்திரத்தில் உள்ள உணவு மட்டுமே தயாரிக்கப்பட்டது. இதுவே மன்னருக்கான உணவாகும் என்று கூறினான். மேலும் இவனே சமைத்த உணவை பரிமாற வேண்டும் என்று மன்னர் கூறியதாக கூறினர். அதனை ஏற்று, மன்னருக்கு உணவு பரிமாற சென்றான். மன்னர் புதிய வகை உணவை உண்பதற்காக ஆவலோடு காத்திருந்தார். ஆனால், இந்த ஒரே ஒரு உணவு வகையை பார்த்ததும் மன்னர் கோபமடைந்தார். இதுபற்றி மன்னர் அவனிடம் வினவியபோது, மன்னா! கோபம் அடையாதீர்கள். ஒரே ஒரு உணவு வகை உள்ளது என்று நினைக்காமல், இதிலுள்ள சுவையை சுவைத்து பாருங்கள். நீங்கள் விரும்பியது போல் இது புதிய வகை உணவாகவும், சுவைமிகுந்த உணவாகவும் நிச்சயம் அமையும் என்று கூறினான். அவன் கூறியதை ஏற்றுக் கொண்ட மன்னர், உணவை பரிமாறுமாறும் உத்தரவிட்டார். உடனே உணவு பரிமாறப்பட்டது. அவன் கூறியது போலவே இது மன்னருக்கு புதிய வகை உணவாகும், சுவைமிகுந்த உணவாகவும் இருந்தது. ஆகையால், மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும் மன்னர், போட்டியாளனே இந்த வகை உணவின் பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவன் மன்னா! இந்த புதிய வகை உணவின் பெயர் "பிரியாணி" என்று கூறினான். உடனடியாக, மன்னர் அறிவித்தபடி, அவனுக்கு போட்டியை வென்றதற்காக, 5000 பொற்காசுகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், கண்ணைக் கவரும் வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டாடைகள் போன்றவற்றை வழங்கி பாராட்டினார். இதனால், அவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். இதுவே பிரியாணி உருவான கதையாகும். சமையல் பற்றி தெரியாமலேயே இந்த போட்டியில் அவன் வென்றதற்கு அவனுடைய மனோபலம், உழைப்பு மற்றும் விடாமுயற்சி மட்டுமே காரணம் ஆகும். ஆகையால் நாமும் நம் வாழ்வில் எப்போதும், எந்நிலையிலும் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை மேற்கொண்டால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நன்றி!
You must be logged in to post a comment.