how மருத்துவம் அறிவோம்: இளைய தலைமுறையிடம் அன்பை பகிருங்கள்

தாத்தா, பாட்டி- இந்த சொற்களுக்கு ஒரு மாஜிக் சக்தி இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். எந்த நாடாக இருந்தாலும் தாத்தா, பாட்டியின் செல்லம், அரவணைப்பு என்பது இறைவனின் ஆசிர்வாதங்களில் ஒன்று. லீவு நாள் வந்து விட்டால் தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று வருவது வளர்ந்த குழந்தைகளுக்குக் கூட கொண்டாட்டம்தான். வயதானாலும், சுய தொழில் செய்யும், நிர்வாகங்கள் செய்யும் தாத்தா, பாட்டிகளையும் இந்த நாட்களில் நாம் காண முடிகின்றது. இருப்பினும் பேரப் பிள்ளைகள் வந்து விட்டால் அங்கு தொழிலாவது, நிர்வாகமாவது என்று அதை தவிர்த்துவிட்டு இந்த இளம் இளவரசர், இளவரசிகளோடு பொழுது போக்குவார்கள். பல பெற்றோர்கள் கூறுவது ஒன்று எங்களை எல்லாம் மிகுந்த கண்டிப்புடன் வளர்த்த என் பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கின்றனர் என்பதுதான். கொரோனா காலத்தில் 3 வருடங்கள் தன் பேரப் பிள்ளைகளை பார்க்காமல் தவித்த ஒரு தொழிலதிபராய் இருந்த தாத்தா, பாட்டியின் மன நிலையினை சமீபத்தில் கேட்டேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 3 வருடம் கழிந்து பிள்ளைகளும் பேரன், பேத்திகளும் வருகின்றனர் என்றதுமே உடலும், மனமும் 20 வயது குறைந்தது போல் இருந்தது. மனம் துள்ளி குதித்தது. பல அலங்காரப் பொருட்கள் பரண் ஏறின. காரணம் வீட்டினுள் எப்பொழுதும் நடக்கும் கிரிக்கெட் பந்து விளையாட்டுகள். இதில் தாத்தாவும் சேர்ந்து லூட்டி அடிப்பார். மிகவும் சுத்தமாய் பராமரிக்கும் வீட்டினை தலைகீழாய் புரட்டிப் போட்டு பின் சுத்தம் செய்தோம். எல்லா அறையிலும் பல பொருட்கள் மலையேறின. ஏனெனில் எம்.ஜி.ஆர். நம்பியார் சண்டை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். தோட்டம் பூத்து குலுங்கியது. ஒரு மாதம் கல்யாண வேலை போல் நடந்தது. திருநெல்வேலி அல்வா முதல் சீஸ் தின்பண்டங்கள் வரை டப்பா, டப்பாவாக நிரம்பியது. இவர்கள் வந்தால் சமையல் ஒரு சவால்தான். ஒருவர் சாப்பிடுவதனை அடுத்தவர் கண்ணால் கூட பார்க்க மாட்டார். ஒருவருக்கு ஒரு இட்லி அண்டா சாம்பாரில் மிதந்து வர வேண்டும் என்றால் அடுத்தவருக்கு தோசை கல்லில் இருந்தே வீரமாய், முறுக்கலாய் வெற்றி நடை போட வேண்டும். முதுகிலேயே ஏசி கட்டி தொங்கவிட வேண்டிய நிலை பெண்களுக்கு இருந்தது. அவ்வளவு தவித்துப் போனார்கள். நம்ம ஊரில் உள்ள வித விதமான விளையாட்டு இடங்களை, உணவு இடங்களை அவர்கள் கச்சிதமாய் சொன்னார்கள். அவர்கள் திரில்லர், பேய் படங்களை பார்த்தார்கள். எங்களுக்காக குழந்தை படங்களை காட்டினார்கள். கடவுள் பக்தி இருந்தது. ஆனால் அது சற்று வித்தியாசமாய் இருந்தது. அவர்களுக்கு பிடித்த கடவுள் படங்கள் அவர்களுடன் வந்தன. அப்படங்களுக்கு சாக்லேட், நான், பன்னீர் பட்டர் மசாலா அளிக்கப்பட்டு பிசு பிசுவென அப்பி இருந்தன. இரவில் அவர்களை இந்த வெய்யிலில் போர்வை கொண்டு போர்த்தி விட்டனர். நாங்கள் பெரும்பாடு பட்டு அவர்களை பளிச்சென ஆக்கினோம். கலி காலத்தில் உங்களுக்கு இப்படியெல்லாம் கூட பூஜை நடக்குமோ என மனதில் இறைவனை கேட்டோம். எங்கள் செல்போன்கள் கேம்ஸ் மைதானம் ஆயிற்று. முக்கிய அழைப்புகளை கூட கவனிக்க முடியவில்லை. எங்களுக்கென்று ஒரு பையில் போன், சார்ஜர், கண்ணாடி இத்யாதி வகைகளை போட்டு அதை குலுக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும்கூட இறுகப் பிடித்துக் கொண்டே இருந்தோம். வீடு முழுக்க இவர்கள் வரைந்த ரவி வர்மா ஓவியங்கள், தரையில் ஒட்டிய நகப் பூச்சு, பல வகை விளையாட்டு பொருட்களால் நாங்கள் கால் வழுக்கி கபால மோட்சம் போகாத குறைதான். பாண்டியாடுதல் போல ஒற்றை காலில் மாறி மாறி குதித்து குதித்து நடந்தோம். இரவு எட்டு மணிக்கு மேல் கண் தானாக மூடிக் கொண்டது. தூக்கத்திலும் மூளையில் ஏதோ சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மனம் மகிழ்ச்சியாய் நிறைவாய் இருந்தது. மூட்டு வலி கூட தெரியலை. இப்ப எல்லோரும் ஊருக்குப் போயிட்டாங்க. எல்லா நோய்களும் திரும்ப வந்து விட்டது என்றனர். இந்த அன்பு, பாசம் இதற்குத்தான் எத்தனை பலம். அவர்கள் மேலும் பேசிக் கொண்டே இருந்தாலும் என் மனம் இந்த அன்பின் வலிமையினைப் பற்றியே சுற்றி சுற்றி வந்தது. இவை குறையும் காரணம் தான் இளைய சமுதாயம் சற்று தடம்மாற ஒரு காரணமாக இருக்கின்றதோ? தாத்தா, பாட்டிகளுக்கு தன் பேரப் பிள்ளைகளுக்காக கண்டிப்பாய் நேரம் இருக்கின்றது. இளம் பெற்றோர்களுக்குதான் (சிலருக்கு) அவர்கள் ரோபோவாக செயல்பட வேண்டியுள்ளது. நல்ல வலிமையான மனம் பெற உறவுகளின் அன்பும் மிக முக்கியமான ஒன்று. இதனை பல பக்கங்களில் எழுதலாம். ஆனால் அனைவரும் நன்கு உணர்ந்த ஒன்றினை விவரித்து எழுத வேண்டிய அவசியமே ஏற்படாது. செயல்படுத்தப்பட வேண்டிய அவசியம் மட்டுமே இங்கு தேவைப்படுகின்றது. தாத்தா, பாட்டிகளை தொந்தரவாகவோ, ரோபோக்களாகவோ பார்க்காமல் மனிதர்களாக பார்த்தாலே போதும். ஒவ்வொரு வீடும் இதனைச் செய்தால் இளைய சமுதாயம் வெகுவாய் காப்பாற்றப்பட்டு விடும். நம் ஞாபகத் திறனை அதிகரிக்க செய்ய முடியுமா? அநேகருக்கு சாவியினை எங்கு வைத்தோம், பர்சினை எங்கே வைத்தோம். போனை எங்கே வைத்தோம் என்று மறந்து விடும். குடும்பமே அவருடன் சேர்ந்து பொருளை தேடும். சில முயற்சிகள் சில பயிற்சிகள் மூலம் நம் ஞாபகத் திறனை சீர் செய்து கொள்ளலாமே. சிகரெட், பீடி போன்றவை ஆக்சிஜன் செல்லும் முக்கிய ரத்த குழாய்களை சுருங்க செய்யும். புகை பிடித்தல் பக்கவாத அபாயத்தினை கூட்டும். ரத்த குழாய் சுருக்கத்தினால் ஏற்படும் மாற்றம், மறதி நோயாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. ரோலர் கோஸ்டர்ஸ் என்ற ராட்சத சுழல் விளையாட்டில் சிறியவர் முதல் பெரியவர் வரை கலந்து கொள்வர். இது நம் தலையினை தலைகீழாக வேகமாக சுழற்றும். இதனால் மூளையில் சிறு சிறு கசிவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். நிபுணர்கள் கூறுவது சைக்கிள் ஓட்டும் போது கூட ஹெல்மெட் அணியுங்கள் என்பது தான். தலையில் அடிபடாது இருக்க கண்டிப்பாக காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும். வீட்டில் நடமாடும் இடங்களில் கீழே பொருட்கள் சிதறி இல்லாமல் இருக்க வேண்டும். தரை வழுக்கி விடாது சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய அடி கூட தலையில் படாது பாதுகாப்பதும் ஞாபகத் திறனை குறையாது வைத்துக் கொள்ளும். டி.வி. அதிகம் பார்ப்பவர்களுக்கு ஞாபகத்திறன் குறையும் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறதாம். புதுமையாக ஏதேனும் செய்யுங்கள். மூளை இதில் சுறுசுறுப்பு அடையும். வெளி நாட்டினர் உதாரணங்களாக கூறுவதனை நம் நாட்டிற்கு ஏற்றார்போல் மாற்றி சொல்ல வேண்டும் என்றால் துணி மாற்றும் போது தலைவாரிக் கொள்ளும் போதும், கண்களை மூடிக் கொண்டு செய்யுங்கள். தினமும் காபி முகத்தில் கண் விழிப்பவர்கள் ஏதேனும் ஒரு நல்ல நறுமணம், பூ, ஊதுவத்தி, சந்தனம் போன்றவற்றின் வாசனையினை சற்று நுகருங்கள். ஆபீசுக்கு வேறு வழியில் ஒரு நாள் செல்லுங்கள். வழக்கமாக எழுதும் கையினை மாற்றி மற்றொரு கையால் எழுதிப் பாருங்கள். நமக்கு மட்டும் தான் போர் அடிக்குமா என்ன? மூளைக்கும் போர் அடிக்கும். எனவே மூளைக்கும் சுறுசுறுப்பினை உண்டாக்குங்கள். ஞாபகத் திறனை கூட்டிக் கொள்ளுங்கள். சில நபர்களுக்கு எப்பொழுதும் எந்த ஒரு வேலையிலும் கொஞ்சம் கவலை இருக்கும். அன்றைய நாள் நல்லபடியாக போக வேண்டும் என்றொரு கவலை எழுந்திருக்கும் பொழுதே சிலருக்கு இருக்கும். இது அவர்களுடைய இயற்கையான வாழ்க்கை முறை ஆகி விடும். சிலருக்கு சில சூழ்நிலைகளில் ஸ்ட்ரெஸ் இருக்கும். அநேகர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் பொழுது இவ்வாறு இருப்பர். சிலர் புது மனிதர்களை சந்திக்கும் போது ஸ்ட்ரெஸ் உடன் இருப்பர். சிறிதளவு ஸ்ட்ரெஸ் என்பது நல்லதே. கவனத்துடன் வெற்றிகரமாக வேலையினை செய்ய இது உதவும். ஆனால் பலருக்கு இந்த கவலை என்பது அடிக்கடி இருக்கும். சற்று கூடுதலாக தினமும் இருக்கும். இதன் காரணமாக அவர்களது செயல்கள் மாறுபட்டு இருக்கும். பீதியுடன் இருப்பர். கற்பனையாக கவலைகள் உருவாகும். அவர்களின் அன்றாட வாழ்க்கையினை இது பாதிக்கும். இது அவர்களின் சொந்த வாழ்க்கை. குடும்பம், வேலை செய்யும் இடம் இவற்றினை பாதிக்கும். இந்த கவலையினை கையாள்வதே கூடுதல் கவலையாகி விடும். இதற்கு மருத்துவமும் அவசியம். நாம் சில வழி முறைகளை கையாள்வதும் அவசியம். Chamomile (சீமை சாமந்தி) இதனை பொடி செய்து டீ போல் தயாரித்து உட் கொள்வதை மேலை நாடுகளில் உள்ளவர்கள் பண்டைய காலத்தில் இருந்தே கை வைத்தியமாக உபயோகித்து வருகின்றனர். இது பல நன்மைகளை அளிக்கின்றது என்கிறார்கள். நரம்பு மண்டலத்திற்கு சிறந்த டானிக் என்று கூறி வருகின்றனர். நம் நாட்டில் அஸ்வகந்தா மாத்திரை அல்லது பொடிக்கு இதே போன்று சிறந்த நற்பலன்கள் இருப்பதாக கூறப்படுகின்றன. தினமும் 20 நிமிடங்களாவது தியானம் செய்யும் பொழுது அதிக மனக்கவலை, மன உளைச்சல், படபடப்பு நீங்குவதாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மசாஜ் செய்வது கவலை. ஸ்ட்ரெஸ் இவற்றினை நீக்குவதாக அனைத்து மருத்துவ பிரிவிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. நமக்கென சிறிது நேரம் அன்றாடம் ஓய்வு தேவை. ஓய்வு நேரத்தில் புத்தகம் படித்தல், நண்பர்களுடன் விளையாடுதல் என இருக்க வேண்டும். ஸ்ட்ரெஸ் இன்றி இருப்போம். நோய்களை தவிர்ப்போம். நோய்களின் அறிகுறிகள் நம் உடல் உறுப்புகள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது. ஒரு உறுப்பில் பாதிப்பு ஏற்படும் பொழுது அதன் அறிகுறி மற்றொரு இடத்திலும் காட்டலாம். ஆனால் நாம் அந்த அறிகுறியின் அடிப்படையினை கவனிக்கத் தவறி விடுகின்றோம். உதாரணமாக கை, பாதம், முகத்தில் வீக்கம் இருந்தால் ஆழமான ரத்த உறைவு, ரத்தக் குழாய்களில் ஏற்படலாம். ரத்த குழாய்களில் இந்த உறைவு கட்டியினை ஏற்படுத்தும். பொதுவில் இது கால்களில் ஏற்படும். இதன் அறிகுறிகளாக கால்களில் வீக்கம், கால்வலி, சிறிது தூரம் நடக்க முடியாமை, கால்களில் நிற மாற்றம், வெது வெதுப்பு போன்றவை ஏற்படலாம். உடனடியாக மருத்துவரின் கவனம் தேவைப்படுகிறது. இருதய நோய்: இருதய பிரச்சினை பல விதமான உபாதைகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று கைகளில் தொடைகளில் வீக்கம் ஏற்படுத்துவது. இது ஆபத்தினை கூட்டும். இதன் அறிகுறி தெரிந்தவுடன் மருத்துவரை நாட வேண்டும். கல்லீரல் நோய்: கல்லீரலில் பாதிப்பு என்றால் பல நோய்கள் ஏற்படலாம். வயிற்றில் வீக்கம் ஏற்படலாம். தைராய்டு சுரப்பி பாதிப்பு என்பது தைராய்டு ஹார்மோன் அதிகமாகவும் சுரக்கலாம். குறைவாகவும் சுரக்கலாம். தொண்டையில் வீக்கம், காலில் வீக்கம் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கலாம். கவனம் தேவை. பொதுவில் கறுப்பு அரிசியில் இருக்கும் நார் சத்து இருதய ஆேராக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றது. சீரான ரத்த அழுத்தம் இருக்க உதவுகின்றது. சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைக்கின்றது. வீக்கத்தினை குறைக்கிறது. 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

About Author