1)வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது. காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிக்கோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க வாய்ப்பு. தமிழகம், புதுச்சேரி, நாகை, கடலூர், எண்ணூர், காரைக்கால், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது - வானிலை மையம்.
2) அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிச.,13-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வு முதலில் மாவட்டத்துக்குள்ளும், பிறகு மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறும். ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் பணியில் சேர்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3) மதுரை மத்திய சிறையில் பலகோடி ரூபாய் ஊழல் புகார் எழுந்த நிலையில் 12 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிறை அலுவலக கண்காணிப்பாளர் உட்பட 12 பேரை மாற்றி சிறைத்துறை டிஜிபி அமரேஷ் புஜாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
4) இந்தியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹16 வரை உயர்ந்துள்ளதாக குளோபல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த மாதம் சிமெண்ட் விலை மூட்டைக்கு ₹10 முதல் ₹15 வரை உயர்த்த சிமெண்ட் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விலை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
5) சேலம் இரும்பாலையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய தேனி மாவட்டம், பெரியகுளம், அழகர்சாமிபுரத்தை சேர்ந்த சக்திவேல் (36) நேற்று மாலை இன்சாஸ் ரக துப்பாக்கியால், திடீரென சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இவருக்கு சித்ரா(35) என்ற மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
6) காரைக்காலில் சாலையோரத்தில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், போர்டுக்கள், விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை அமைக்க தடை. காரைக்காலில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
7) மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:- மத்திய அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. இந்தியில் மட்டுமே தேர்வு நடத்தும் திட்டம் இல்லை. அதுபோல், அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் இந்தியை கட்டாயமாக்கும் திட்டம் இல்லை. அந்த கேள்வியே எழவில்லை. தேசிய கல்வி கொள்கை, தாய்மொழி வழி கல்வியை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
8) ஐ.ஏ.எஸ் மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தமிழக அரசால் சென்னையில் நடத்தப்பட்டு வரும் அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும். அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு நிகழாண்டு முதன்மைத் தேர்வுக்கு பயின்ற 76 பேரில், 15 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 18 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஒரு மாற்றுத் திறனாளி பெண்ணும் அடக்கம். மேலும் இருவர் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி அடைந்துள்ளனர். இப்பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்படவுள்ளது. பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோரால் நடத்தப்படும் இத்தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிற தேர்வர்களும் பங்கு பெற அனுமதிக்கப்படுவர். இதற்கென கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. அவ்வாறு பங்கு பெற விரும்பும் தேர்வர்கள், தங்களது விருப்பத்தை, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 94442 86657 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ அல்லது 044 2462 1909 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத் தேர்வு தேதி விரைவில் www.civilservice coaching.com என்ற இணையதளத்தில் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
9) அமெரிக்காவில் இருந்து இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை டைம் இதழ் வெளிவருகிறது. சர்வதேச அளவில் இந்த இதழ் மிகவும் பிரபலமானதாகும். 2022மாவது ஆண்டின் சிறந்த மனிதர்கள் பட்டியலை டிசம்பர் 26 முதல் ஜனவரி 9, 2022 தேதியிட்ட இதழில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ரஷ்ய போரை துணிச்சலாக எதிர்கொண்டு வரும் உக்ரைனின் அதிபர் ஜெலென்ஸ்கி முதலிடம் பிடித்து அட்டைப்படத்தை அலங்கரித்துள்ளார்.
10) சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் எத்தனை பேரை இதுபோல் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி உள்ளாரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
11) வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கிற்கு சுமார் 460 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைக் கொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடைப்பட்ட பகுதிகளில் கரையை கடக்கக்கூடும். அதன் காரணமாக இன்று நாளை மற்றும் 10-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். கனமழையை பொறுத்தவரை 8-ம் தேதி (இன்று) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னை திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளிக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 9-ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. 10-ம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேடை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
12) தெலுங்கானா மாநிலத்தில் காசோலை மோசடி வழக்கில் மனைவிக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து கோர்ட்டில் ஆஜரான கணவர் கைது செய்யப்பட்டார். ஆள் மாறாட்டம் செய்தது மற்றும் நீதிமன்றத்திற்கு அவமதிப்பு வழக்குகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
13) தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் 2019ம் ஆண்டில் 602 நிறுவனங்கள் தொடங்கப்பட்டதாகவும் 2020ல் 755 நிறுவனங்களும், 2021ல் 1,103 நிறுவனங்களும், 2022ம் ஆண்டு நவம்பர் 30 வரை 1,501 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் தெரிவித்தார்.
14) பெங்களூருவை சேர்ந்த வேதாந்து இன்னோவேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 385 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 11.6% ஆகும். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு அதற்கான தகுந்த இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. செலவின் குறைப்பின் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15) உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் 6 சட்டப்பேரவைகளுக்கும், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இவை அனைத்திலும் பாஜக பின் தங்கியுள்ளது.
Enjoyed this article? Stay informed by joining our newsletter!
You must be logged in to post a comment.
smile
Subscribe our newsletter to stay updated.
You must be logged in to post a comment.